நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க

சூடாகும் பூமி

அழிவைத் தடுக்க கை கோர்ப்போம்

- பிஞ்சு மாமா

இனிய பிஞ்சுகளே...
ஏப்ரல் மாதம். தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருப் பீர்கள். கொளுத்தும் கோடை வெயில் தொடங்கி விட்டது. இன்னும் 3-4 மாதங் களுக்கு இந்த வெயில் தொடரும். அதனால் தான் கோடை விடுமுறை ஏப்ரல் - மே மாதங்களில் விடப்படுகிறது.
ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில், பெருமழை பெய்தது. ஏப்ரல் தொடங்கும் நேரத்தில் கூட சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. ஏன் இப்படி கால மாறுதல் ஏற்பட்டது தெரியுமா? பூமி வெப்பமடைகிறது. அதனால் தான் தட்ப வெப்பநிலைகளில் மாற்றங்கள் நிகழுகின்றன என்று வானவியல் அறிவியலாளர்கள் கூறு கிறார்கள். சரி, இதற்குக் காரணம், இயற்கையி லேயே அமைந்ததா என்றால் சிறிதளவு இயற் கையாகவும், செயற்கையாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட சில காரணங்களாலும்தான் இந்த பூமி வெப்பம் அடைகிறது என்றும் அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.
இயற்கைச் சமநிலையை நாம் தகர்த்துவிட் டோம். அதிக வெப்பம் உமிழும் குழல் விளக்குகளையும் (Tube Lights), குண்டு விளக்கு களையும் (bulb) அதிகமாக எரியவிட்டிருக் கிறோம். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் (Two wheeler & Car) பெருகி விட்டன. இவைகள் வெளிவிடும் கரியமில வாயு சுற்றுச் சூழலைப் பாதிக்கிறது. குளிர் சாதனப் பெட்டிகள் (Fridge) குளிர் சாதனம் (Air Condition) ஆகியவற்றையும் இப்போது அதிக அளவு பயன்படுத்துகிறோம். இவைகளிலிருந்து வெளிவரும் வாயுக்களாலும் (Chloro Flero carbon) சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம். இதனால் ஓசோன் மண்டலத் தில் ஓட்டை விழுந்து பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது.
பூமி வெப்பமயமாதல் குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்ற இந்தியரான ஆர்.கே. பச்சோரி கடந்த மாதம் 28ஆம் நாள் சென்னை வந்திருந்தார். அண்ணா பல்கலைக் கழகத்தில் தட்பவெப்ப நிலை மாறுபாடு குறித்த ஆய்வு மையத்தை அவர் திறந்து வைத்தார். அந்நிகழ்ச்சியில் பச்சோரி பேசியபோது, இன்று சுற்றுச் சூழல் பிரச்சினை உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற தலையாய பிரச்சினை ஆகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் சுற்றுச் சூழல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக் கிறது. இதற்கு 90 சதவிகிதம் மனிதன் செய்த தவறுகளே காரணம் ஆகும். தட்ப வெப்ப நிலை மாறுபாட்டால் தமிழக கடலோரப் பகுதி பாதிக்கப்படும். கடல்நீர் மட்டம் உயரும். கடல் நீர் ஊருக்குள் புகுந்து விவசாயத்தைப் பாதிக் கும். பூமியில் வெப்பம் உயர்வதால் மனிதனின் சுகாதாரம் பாதிக்கப்படும் என்று அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டார். இந்தப் பிரச் சனைக்கு எப்படி தீர்வு காணலாம் என்பது குறித்துப் பேசிய அவர்:
- சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பசுமை இல்ல (Green House) வாயுக்களை கட்டுப்படுத்தவேண்டும்.
- மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
- காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட மரபு சாரா மின் உற்பத்தித் திட்டங்களை ஊக்கப் படுத்த வேண்டும்.
எனச் சில ஆலோசனைகளையும் சொல்லி யுள்ளார். இவற்றை கொஞ்சம் நினைவில் தேக்கிக் கொள்ளுங்கள். இன்றைய பிஞ்சுகள் தானே நாளைய சமுதாயமாக உருவெடுக்கப் போகிறீர்கள். கடந்த 50 ஆண்டுகளாக நமக்கு முந்தைய தலைமுறை செய்த தவறுகளை நாமும் செய்யக் கூடாது அல்லவா.
இயன்ற வரை இயற்கையைப் பேணிப் பாது காக்க வேண்டும். இரு சக்கர மோட்டார் வாகனங்களில் செல்வதைக் குறைத்துக் கொண்டு மிதி வண்டிகளில் செல்லலாம். இதனால் உடற்பயிற்சியும் கிடைக்கும். குளிர் சாதனத் தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு. இயற்கையான காற்றை பெற்றுக் கொள்ளலாம் மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்த வேண்டும். நாம் இருக்கும் இடத்தில் மட்டும் மின் விளக்குகளோ, மின் விசிறியோ இயங்கினால் போதும். யாரும் இல்லாத இடங்களில் மின்சாரம் வீணாவதை நிறுத்தி விடுங்கள். நாம் இருக்கும் இடத்தைவிட்டுச் செல்லும்போது மறவாமல் விளக்குகளையும் மின் விசிறியையும் அணைத்து விடலாமே. (நான் சிறு வயதிலிருக்கும் போதே என் தாத்தா இந்த சிக்கன முறையை எனக்குப் பழக்கப்படுத்தி விட்டார். இதன் பயனாக இன்றும் அலுவலகத்திலோ, வீட்டிலோ நான் இருக்கும் இடத்தை விட்டுச் செல்லும்போது மின் விளக்குகளையும், மின் விசிறிகளையும் அணைத்துவிட்டுத் தான் செல்கிறேன். இது ஒரு அனிச்சை செயலாகவே ஆகிவிட்டது). இப்படி சிறு சிறு பழக்கங்களை இப்போதே கற்றுக் கெண்டால் நாளைய உலகம் சிறப்பாக இருக்கும் அல்லவா.
எதிலும் முன்னோடி தமிழ்நாடுதான். தட்ப வெப்ப நிலை மாறுபாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சி மையம் இந்தியாவி லேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கோடி ரூபாயை நம்முடைய முதலமைச்சர் கலைஞர் தாத்தாவின் அரசு வழங்கியிருக்கிறது.
மேலும், பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்துவதற்காக தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி களிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு அமைப்புகள் அமைக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித் துள்ளார்.
சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல நாம் ஒவ்வொருவரும் சிறிய அளவிலாவது பூமி வெப்பமடைவதைத் தடுக்க நான் மேலே சொன்னவற்றைக் கடைபிடித்தால் இயற்கைப் பேரிடர்களிலிருந்து உலகைக் காத்திட உதவலாம் அல்லவா!