விண்வெளிச் சுற்றுலாவிற்கு தயாரா நீங்க?
- சமன்
 |
என்ன பிஞ்சுகளே, விடுமுறை விட்டாச்சு... சிலருக்கு இன்னும் ஒரு வாரத்தில் விடுமுறை காத்திருக்கிறது. இந்த ஆண்டு எங்கே சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள்?
கோடை வாழிடங்களா? இல்லை சொந்த ஊர், தாத்தா, பாட்டி என்று கிளம்பப் போகிறீர்களா? வாருங்களேன் விண்வெளிக்கு ஒரு சுற்றுலா கிளம்பலாம் என்று அறிவியல் அழைக்கிறது. அவசரப்படாதீர்கள்... அதற்கு இன்னும் இரண்டாண்டுகள் இருக் கிறது, அதாவது இன்னும் இன்னும் இரண்டு முழு ஆண்டுத் தேர்வுகள் இருக்கின்றன.
அதுமட்டும் போதுமா? விண்வெளிக்குச் செல்ல வேண்டுமானால் அதற்கென உள்ள படிப்புகளைப் படிக்க வேண்டாமா? கல்பனா சாவ்லா மாதிரி... சுனிதா வில்லியம்ஸ் மாதிரி...
ம்ஹூம்... தேவையில்லை. உங்களுக்கு வேண்டுமானால் இன்னும் காலமிருக்கிறது. படிக்கலாம்.. பட்டம் பெறலாம்.. பயிற்சி பெறலாம். ஆனால் இப்போதே வயதானவர் களுக்கு விண்வெளியில் பறக்க ஆசை இருக்காதா? உங்கள் வயசுக்காரர்களிலேயே அனைவரும் விண்வெளிப் படிப்பு படிக்க முடியுமா?
விமானத்தில் பறக்க படிப்பு தேவையா எனக் கேட்கிறது அறிவியல்..
"விமானத்தில் பறப்பதற்குத் தான் இத்தனை பில்டப் கொடுக்கிறீர்களா?" என்று அவசரப்பட்டு சலித்துக் கொள்ளாதீர்கள்.
அதிகபட்சம் விமானம் பறப்பது 40000 அடிகள் தான். அதாவது.. 13 கிலோமீட்டர் உயரம் தான்.. அதில் மேகங்கள் விமானத்தின் கீழே மிதப்பதைக் கண்டு ரசிக்கலாம் அவ்வளவுதான். ஆனால் நாம் சொல்வது அதற்கும் மேலே! மேலே!
நீங்கள் பறக்கும் போது பூமியின் காற்று மண்டலம் உங்களுக்குக் கீழே! பூமி அதற்கும் கீழே! உங்களுக்கு மேலே நட்சத்திரங்களும் திறந்த வானமும் மட்டுமே! எடையை உணர முடியாத உயரம்... மிதக்கும் நிலை.... கொஞ்சம் நஞ்சமில்லை.. 62 கிலோமீட்டர் . சுமார் 2 லட்சம் அடிகள்.
அந்த உயரத்திற்கு பறந்து மிதந்து திரும்பும் அற்புத வாய்ப்பை அறிவியல் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறது.
போதும்... போதும்... சீக்கிரம் செய்தியைச் சொல்லி முடியுங்கள்என்ற உங்கள் அவசரம் புரிகிறது. சொல்லிவிடுகிறேன்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த XCOR என்ற நிறுவனம் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இரண்டுபேர் மட்டும் பயணிக்கக் கூடிய லின்க்ஸ் (Lynx) என்ற சுற்றுலா ராக்கெட்டை தயார் செய்திருக்கிறது எக்ஸ்கார் நிறுவனம். ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக் கும் மட்டுமல்லாமல், விண்வெளியை பொதுமக் களுக்கும் திறந்துகாட்டும் வித்தையை நாங்கள் கொண்டுவருகிறோம் என்று மார் தட்டுகிறார் அந்நிறுவனத்தின் தலைவர் கிரீஸன் . இதன் படி முதல் ராக்கெட் கிளம்பப் போவது 2010-இல் தான். ஆனால் இப்போதே வரிந்துகட்டி வரிசையில் நிற்கிறார்கள் முன்பதிவு செய்வதற் காக. மிகவும் பாதுகாப்பான, சுற்றுச் சூழலுக்கும் பெருங்கேடு விளைக்காத வண்ணம் எங்கள் இயந்திரமும் அதில் பயன்படுத்தப்படும் எரிபொருளும் இருக்கும் என்கிறார் அவர். சரி, இந்த ராக்கெட் எப்படி கிளம்பும்? எத்தனை நாளாகும்? சாப்பாடு கட்டிக் கொண்டு போவதா? இல்லை போகிற வழியில் ஏதாவது ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டுக் கொள்ள லாமா? சுற்றுலா போவதென்று கிள்ம்பி விட்டால் இதெல்லாம் அவசியமான கேள்விகள் அல்லவா?
அதற்குமுன் இந்த ராக்கெட் கிளம்பும் விதத்தை தெரிந்துகொள்வோம். விமானத்தைப் போலவே ஓடுபாதையில் (Runway) வேகமாகக் கிளம்பி குறிப்பிட்ட தூரம் சென்றதும், அங்கிருந்து செங்குத்தாக வானத்தை நோக்கிக் கிளம்பும். பிரகு வானத்தில் மிதக்கும் பூமிக்குத் திரும்பி வரும்.
ஆக மொத்தம் அரை மணிநேரத்திற்குள் வானத்தை எட்டிப் பார்த்துவிட்டு பூமிக்கே திரும்பி விடலாம். இந்த வரைபடம் உங்களுக்கு விளக்கமாக சொல்கிறதா?
அப்புறம் என்ன கிளம்ப வேண்டியது தானே... என்று அமெரிக்காவிற்கு பயணச் சீட்டு போடப்போகும் முன் ஒரு செய்தி.... பயணச்சீட்டு விலை கேட்கவில்லையே.... அதிகமில்லை ஜென்டில்மேன்.... சில பல கோடிகள் தான். அதனால் கவலைப்படாதீர் கள் ஆரம்பத்தில் விமானம் கூட இப்படித் தான் அதிக விலை இருந்தது.. இப்போது அப்படியா? நம் காலத்திற்குள் எப்படியும் ஒரு சுற்று போய் வந்துவிட மாட்டோமா என்ன? ஏற்கனவே விர்ஜின் நிறுவனமும் களத்தில் இருக்கிறது... போட்டியில் கண்டிப்பாக விலையைக் குறைப்பார்கள்!
அப்புறம் வருங்காலத்தில் ஏதாவது வார இதழ் வாங்கினால் குலுக்கல் முறையில் கூட்டிப் போகும் திட்டம் கூட அறிவிக்கப்படும்... காத்திருப்போமே....! |